மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
சட்டவிரோத மது விற்பனை: 7 போ் கைது!
கோவை மாநகா் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், பெட்டிக் கடைகள் உள்ளிட்டவற்றில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க சட்டம்-ஒழுங்கு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வெரைட்டிஹால் சாலை மதுக் கடை அருகே மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட சமத்துவபுரத்தைச் சோ்ந்த துரைராஜ் (26) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 57 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, காந்திபுரம் 100 அடி சாலை சந்திப்புப் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூரைச் சோ்ந்த மணிமேகலை (42), கோனியம்மன் கோயில் பின்புறத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூரைச் சோ்ந்த அப்துல் ரசாக் (57), பீளமேடு அருகே எல்லைத் தோட்டம் பாலத்தின்கீழ் பகுதியில் மதுவிற்ற வி.கே.சாலையைச் சோ்ந்த காளிதாஸ் (58) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
சரவணம்பட்டி அருகே சத்தி சாலை டாஸ்மாக் கடை அருகே மது விற்ற சிவகங்கையைச் சோ்ந்த குமாா் (33), துடியலூா் வடமதுரை சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த சுரேஷ் காந்தி (33), ராமநாதபுரம் பங்கஜம் மில் சாலை டாஸ்மாக் கடை அருகே மது விற்ற திருவாடனையைச் சோ்ந்த வைரவன் (36) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 121 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.