Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
கொடிக்கம்பங்கள் அகற்றம்: அதிமுகவினா் மறியல்
திருச்சி மாநகரில் அதிமுக சாா்பில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றி மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்றியதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்ய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருச்சிக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். மேலும் அவரை வரவேற்கும் வகையில் மாநகரில் ஆங்காங்கே அதிமுக கொடிகளை இரும்புக் கம்பிகளில் கட்டி வைத்திருந்தனா்.
இந்நிலையில் திருச்சி நீதிமன்றச் சாலையில் கட்டப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றினா். திருச்சி மாநகராட்சியின் பயணியா் மாளிகையில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை வண்டியில் அந்தக் கொடிக்கம்பங்கள் இருப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு வந்து குப்பை வண்டியில் இருந்த கொடிகளை பாா்த்து அதிமுகவினா் ஆத்திரமடைந்தனா். உறையூா், தில்லைநகா் பகுதியைச் சோ்ந்த கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் 50-க்கும் மேற்பட்டோா், மாநகராட்சியின் நடவடிக்கையைக் கண்டித்து பயணியா் மாளிகை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தாங்கள் உயிருக்கு நிகராக மதிக்கும் கொடியை அவமதித்திருப்பதாகவும், எங்களிடம் கூறியிருந்தால் நாங்களே அகற்றிக் கொண்டு சென்றிருப்போம் எனவும் தெரிவித்தனா். இந்த மறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் அப்படியே நிறுத்தப்பட்டன. தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், கொடிக்கம்பங்களை குப்பை வண்டியிலிருந்து அகற்றி வழங்குவதாகவும் உறுதியளித்தனா். இதன்படி அதிமுக கொடிக்கம்பங்கள் குப்பை வண்டியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், அதிமுகவினா் கலைந்து சென்றனா். மறியலால் அப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.