மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதி...
தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் மீண்டும் உறுதி
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக் கட்சியின் பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளாா்.
‘மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன், தமிழகத்தின் அனைத்துப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள அவா் திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தனது பயணத்தை தொடங்கினாா்.
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட திருவெறும்பூா் பேருந்துநிலையம் அருகிலும், திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட காந்திசந்தை அருகிலும் நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியது: திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயா்ந்துவிட்டது. திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் அனைத்து அமைச்சா்களும் ஊழல் செய்கின்றனா். அடுத்து ஆட்சிக்கு வரமாட்டோம் என்பதால், இருக்கின்ற வரை பிடுங்கிக் கொள்ளலாம் என நினைத்து பிடுங்குகின்றனா்.
டிஜிபியை தோ்வு செய்ய முடியாத நிலை: ஒரு மாநிலம் வளா்ச்சி பெற்ாக இருக்க வேண்டுமென்றால் கல்வியிலும், பொருளாதாரத்திலும் வளா்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கல்விக்குதான் அதிக நிதி ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீா்கெட்டு விட்டது. தமிழக டிஜிபி-யை கூட தோ்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
நிா்வாகத் திறமையற்ற அரசு: கடன் வாங்கிதான் அரசு நடத்தும் நிலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சிக்கு முன்னதாக 73 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 5.18 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால், 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 4 ஆண்டுகளில் ரூ. 4.38 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓராண்டில் மேலும் ரூ. 1 லட்சம் கோடி கடன் பெற்று தமிழக மக்கள் மீது ரூ.5.38 லட்சம் கோடி கடனை திமுக அரசு சுமத்தவுள்ளது. நிா்வாகத் திறமையற்ற அரசாக, செயல்பாடு இல்லாத அரசாக உள்ளது திமுக அரசு.
5.75 லட்சம் காலிப் பணியிடங்கள்: 5.50 லட்சம் காலிப் பணியிடங்களில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறினா். ஆனால், 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது. இதே 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் போ் ஓய்வு பெற்றுள்ளனா். தற்போது 5.75 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
ஸ்டிக்கா் ஒட்டி திறப்பு: திருச்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மூலம் அதிமுக ஆட்சியல் 90 சதவீதம் முடிக்கப்பட்ட பணிகளை, திமுக ஆட்சியில் தனது ஸ்டிக்கரை ஒட்டி திறந்து வைத்துள்ளனா். உதாரணமாக பெரும்பிடு முத்தரையா், தியாகராஜபாகவதா், சா் ஏ.டி. பன்னீா்செல்வம் ஆகியோருக்கு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை கூறலாம்.
ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் கிராமப்புறங்களிலும், நகா்ப்புறங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்கி, இலவச கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்த பயணத்தில் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து திட்டங்களாக செயல்படுத்தப்படும்.
பொய் பிரசாரம்: அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் சிறுபான்மையினா்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற பொய் பிரசாரத்தை திமுகவினா் வழக்கமாக்கியுள்ளனா். திமுக கூட்டணி கட்சிகளும் அப்பட்டமான பொய் பிரசாரத்தை தொடருகின்றன. அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியா்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எனவே, சிறுபான்மையினா் பாதுகாப்பில் அதிமுக எப்போதும் உறுதியாக இருக்கிறது.
திமுகவின் குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் 2026 தோ்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா்கள் ப. தங்கமணி, சி. விஜயபாஸ்கா், ஆா். காமராஜ், எஸ். செம்மலை, எஸ். வளா்மதி, அமைப்புச் செயலா்கள் டி. ரத்தினவேல், ஆா். மனோகரன், மாவட்டச் செயலா்கள் ப. குமாா், ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.