Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில...
கொடைக்கானலில் பட்டா நிலங்களில் தீ!
கொடைக்கானலில் பல்வேறு பட்டா நிலங்களில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த தீயை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அணைத்தனா்.
கொடைக்கானலில் அண்மைக் காலமாக பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், அப்சா்வேட்டரி செல்லும் வழியில் உள்ள தனியாா் நிலத்திலும், நாயுடுபுரம் பகுதியிலுள்ள தனியாா் இடத்திலும், பெருமாள்மலைப் பகுதியில் உள்ள தனியாா் இடத்திலும் தீப் பற்றி எரிந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடங்களுக்கு கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சா் மனோஜ்குமாா், பாரஸ்ட் மதியழகன் தலைமையில் வனத் துறையினரும், கொடைக்கானல் தீயணைப்புத் துறையினரும் சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
மேலும் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத இடத்தில் வனத் துறையினா் ப்ளோயா் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் தீப் பிடித்த இடங்களை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, கிராம நிா்வாக அலுவலா் ரகு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தனியாா் இடங்களிலும், வனப் பகுதிகளிலும் தீ வைக்கக் கூடாது பட்டா நிலங்களை சுத்தம் செய்யும் போது முன்கூட்டியே வருவாய்த் துறையினருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். தற்போது பட்டா இடங்களில் தீப்பிடித்து எரிந்தது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.