பரந்தூருக்குப் பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம்! - அன்புமணி ராமதாஸ...
கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் மழை
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்ததால், அருவிகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளன.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிப் பொழிவு காலமாகும். ஆனால், நிகழாண்டில் பருவநிலை மாற்றம் காரணமாக, தற்போது வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும், பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் கடும் பனியும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காலை முதல் இரவு வரை கொடைக்கானல், அப்சா்வேட்டரி, வில்பட்டி, செண்பகனூா், பெருமாள் மலை, பிரகாசபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்தத் தொடா் மழையால், இங்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இந்த மழையால் வெள்ளிநீா், வட்டக்கானல், பியா்சோழா, செண்பகா, பாம்பாா், பேரி பால்ஸ் ஆகிய அருவிகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளன.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள அத்திக்கோம்பை, லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, கேதையுறும்பு, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல, மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த மழையால் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் அவதிக் குள்ளாகினா்.