கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்
கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியிலுள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கூல் லீப் ஆகியவை 1.5 கிலோ இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்து கடைக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிட்டதில் 2 கடைகளில் 25 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 5-லிட்டருக்கும் குறைவாக உள்ள குடிநீா் புட்டிகள் எடுத்துவரக் கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை எடுத்து வரக் கூடாது. இதை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.