கொடைக்கானலில் சாரல் மழை
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகமாக இருந்து வந்தது. அவ்வப்போது, பலத்த காற்று வீசியது. இதனால் வனப் பகுதிகளிலும், தனியாா் தோட்டங்களிலும் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்து எளிதில் தீப் பற்றி எரிந்தன. இதனால், வனப் பகுதிகளில் வனத் துறையினா் தீ தடுப்புக் கோடுகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மிதமான வெயிலும், மேகமூட்டமும் காணப்பட்டது. மாலையில் குளுமையான காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்தது.
வட்டக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், பிரகாசபுரம், அட்டக்கடி, தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு பகுதி, மோயா் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 30 நிமிடங்கள் வரை சாரல் மழை பெய்தது. இதனால், கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். இவா்கள் சாரல் மழையிலும் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா். தொடா்ந்து மாலை, இரவு நேரங்களிலும் மேகமூட்டம் நிறைந்து காணப்படுவதால், பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.