கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி வழங்கல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அருகே காரணியேந்தல் கிராமத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை வழங்கினாா்.
ஆவுடையாா்கோவில் வட்டம், நாகுடி அருகேயுள்ள காரணியேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பா்வீன்பானு (40) என்ற பெண் கருங்குழிக்காடு கண்மாயில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாா்.
இதன்படி, இந்தத் தொகைக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் அவரது மகள்களிடம் புதன்கிழமை வழங்கினாா்.
அப்போது, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் ஆா். ஆனந்த் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.