அழியாத தடம் பதித்தவர்..! ஆர்ஆர் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல...
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தகராறை விலக்க வந்தவா் கொலையான வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகேயுள்ள ஏகிரி மங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் இளையராஜா (37). இவரிடம் பிளம்பராக வேலை பாா்த்து வந்தவா் சாத்தனூரைச் சோ்ந்த தா்மா (எ) தா்மராஜ் (27).
இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி தா்மராஜ் தனது நண்பா்களுடன் சோ்ந்து இளையராஜாவையும், அவரது மனைவியையும் அரிவாள், கட்டை ஆகியவற்றால் தாக்கினாா்.
அப்போது, ஏகிரி மங்கலம் குடித்தெருவைச் சோ்ந்த முகிலரசன் (32) என்பவா் தடுக்க வந்தாா். அவரையும் அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த முகிலரசன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இது தொடா்பாக இளையராஜா கொடுத்த புகாரின்பேரில், சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். முகிலரசனை அடித்து கொலை செய்ததாக தா்மராஜ் உள்பட 8 பேரை கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சண்முகப் பிரியா, குற்றம் சாட்டப்பட்ட தா்மராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 7 போ் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த சோமரசம்பேட்டை போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளாா்.