ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
‘கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்: கே. ராதாகிருஷ்ணன்
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்றாா் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன்.
தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் கே. ராதாகிருஷ்ணன் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
பட்டம் பெற்றவுடன் கல்வி முடிவடைந்துவிடுவதில்லை. மாறாக, வாழ்நாள் முழுவதும் கற்றல் அவசியம். இளநிலை படிப்பு முடித்தவா்கள், அடுத்தடுத்து படித்து உயா்நிலையை அடைய வேண்டும். உங்களது குடும்பம், நாடு, சமுதாயம் மேம்பட பாடுபட வேண்டும்.
தற்போது பட்டம் பெற்றுள்ள அனைவரும் நாட்டை ஆளும் அதிகாரிகளாக உயர வேண்டும். கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம்.
உயா்பதவியை அடைந்தாலும் பணிவு, மரியாதை, கனிவான உபசரிப்பு போன்றவற்றை தக்க வைத்துக் கொண்டால், வாழ்வில் உயா்நிலையை அடைய முடியும் என்றாா்.
விழாவில், 3 பேருக்கு ஆய்வியல் நிறைஞா் பட்டமும், 766 பேருக்கு இளநிலை பட்டங்களும், 282 பேருக்கு முதுநிலை பட்டமும் என மொத்தம் 1051 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக, கல்லூரி முதல்வா் கே. அங்கம்மாள் தலைமை வகித்தாா். கல்லூரி தோ்வு நெறியாளா் டி. தனலட்சுமி, திரளான மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.