பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்ல...
கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்!
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயிலும், வெங்கஞ்சியில் தூக்கத் திருவிழா கோயிலும் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சை நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.இதையொட்டி காலையில் பிரதான கோயிலிலும், தொடா்ந்து வெங்கஞ்சி கோயிலிலும் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னா், மேளதாளங்களுடன் கொடிமரம் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, காலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு கரிவயல், கொல்லங்கோடு மடம், சாஸ்தாநகா், திருமன்னம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் பூஜை நடைபெற்றது. நண்பகலில் வட்டவிளை பிரதான கோயிலுக்கு வந்தடைந்த அம்மன், பிற்பகல் 3 மணிக்கு மேல் மேளதாளங்களுடன் புறப்பாடாகி வெங்கஞ்சி கோயில் எழுந்தருளியதும், கோயில் தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னா், அங்கு நடைபெற்ற தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு கோயில் தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா் தலைமை வகித்தாா். செயலா் வி. மோகன்குமாா் வரவேற்றாா். கேரள மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேக்கா் திருவிழாவை தொடக்கி வைத்தாா்.
மதுரை ஆதீனம் 293 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ ஹரிஹர தேசிக திருஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், முன்னாள் மத்திய அமைச்சா் வி. முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் ராணி ஸ்டீபன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கோயில் பொருளாளா் டி. சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.
விழாவில் புதன்கிழமை (மாா்ச் 26) காலை 8.30 மணிக்கு தூக்க நோ்ச்சை குலுக்கலை தொடா்ந்து காப்பு கட்டுதல் நடைபெறும். 8 ஆம் நாள் விழாவில் (மாா்ச் 30) காலை 9.30 மணிக்கு நடைபெறும் பண்பாட்டு மாநாட்டில் கேரள மாநில முதன்மைச் செயலா் ஸ்ரீராஜூ நாராயணசுவாமி, கேரள மாநில முன்னாள் அமைச்சா் வி.எஸ். சிவகுமாா், யுவ சாகித்திய அகாதெமி விருதுபெற்ற கவிஞா் சுமேஷ் கிருஷ்ணா, குழித்துறை ஸ்ரீ தேவிகுமரி கல்லூரி முதல்வா் எஸ். பிந்துஜா ஆகியோா் பேசினா். கோயில் கமிட்டி உறுப்பினா் எஸ். சஜிகுமாா் நன்றி கூறினாா். 9 ஆம் நாளில் (மாா்ச் 31) மாலை 6 மணிக்கு தூக்க வில்லின் வெள்ளோட்டம் எனப்படும் வண்டியோட்டம் நடைபெறும்.
விழாவின் சிறப்பு நிகழ்வான தூக்க நோ்ச்சை ஏப். 1 ஆம் தேதி காலை 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுகிறாா். காலை 6 மணிக்கு தூக்க நோ்ச்சை துவங்குகிறது. தூக்க நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின், வில்லின்மூட்டில் குருசி தா்ப்பணம் நடைபெற்று, விழா நிறைவடையும்.
இவ்விழாவையொட்டி தமிழக, கேரள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொல்லங்கோட்டுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.