வெளிநாடு தப்பிய போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப்பின் கைது
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற போக்சோ குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வில்லுக்குறி அருகே உள்ள கிணற்றடிவிளை பகுதியை சோ்ந்தவா் தனுஷ் (39). இவா் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சோ்ந்த, அப்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரணியல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இரணியல் போலீஸாா் வழக்கு பதிவு செய்து தனுஷை தேடி வந்தனா்.
இந்த நிலையில் அவா் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரணியல் காவல் துறையினா், இந்திய குடியுரிமை அலுவலகத்தில் தகவல் கொடுத்து தனுஷை கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய தனுஷை போலீஸாா் பிடித்து, இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டா் செந்தில்வேல்குமாா் மற்றும் போலீஸாா் கொச்சி சென்று தனுஷை இரணியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா் போக்சோ சட்டத்தில் அவரைக் கைது செய்தனா்.