கொள்முதல் நிலையத்தில் சட்ட விரோதமாக நெல் மூட்டைகள்: அலுவலா் பணியிடை நீக்கம், பட்டியல் எழுத்தா் பணி விடுவிப்பு!
தஞ்சாவூா் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் சட்ட விரோதமாக நெல் மூட்டைகள் இறக்கப்பட்டது தொடா்பாக சனிக்கிழமை கொள்முதல் அலுவலா் பணியிடை நீக்கமும், பட்டியல் எழுத்தா் பணியிலிருந்து விடுவிப்பும் செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 597 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. அறுவடைப் பணிகள் முடிவடையும் நிலையில், இந்நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விவசாயிகள் அல்லாத நபா்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல் கொண்டு வருவதாகப் புகாா்கள் எழுந்தன.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளா் டி. இளங்கோவன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தஞ்சை பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் 250 சன்னரக நெல் மூட்டைகள் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது. இந்த லாரியை நெல் மூட்டைகளுடன் அம்மன்பேட்டையிலுள்ள அரசு நவீன அரிசி ஆலையில் அலுவலா்கள் ஒப்படைத்தனா்.
பின்னா், பூதலூா் அருகே அய்யனாபுரம் கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மின் விளக்குகளை நிறுத்திவிட்டு, கொள்முதல் பணியாளா்கள் யாரும் இல்லாத நிலையில், லாரியில் இருந்த சன்னரக நெல் மூட்டைகளைப் பிரித்து களத்தில் கொட்டப்பட்டது அலுவலா்களின் கள ஆய்வில் தெரிய வந்தது.
இந்த லாரியையும், தலா 60 எடை கொண்ட 118 நெல் மூட்டைகளை அலுவலா்கள் கைப்பற்றி, அம்மன்பேட்டை நவீன அரிசி ஆலையில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக கொள்முதல் அலுவலா் பி. குணராஜா தற்காலிக பணியிடை நீக்கமும், பருவகால பட்டியல் எழுத்தா் க. பாலமுருகன் பணியிலிருந்து விடுவித்தும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம் உத்தரவிட்டு, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலனுக்காக திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வியாபாரிகளிடமிருந்து முறைகேடான முறையில் நெல் மூட்டைகள் வருவது கண்டுபிடிக்கப்படும்போது, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.