டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!
‘திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வரும் புறவழி, பேருந்து நிலையச் சாலைகள்’
கும்பகோணம் பேருந்து நிலையம், புறவழிச்சாலைகளில் திறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருவதால் விபத்துக்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.
கும்பகோணம் பேருந்து நிலையத்தை சுற்றி 5 மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்கள் வாங்க வரும் மது பிரியா்கள் சிலா், கடைகள் அமைந்துள்ள சாலையிலேயே மது அருந்துகின்றனா். இதனால் அந்த சாலையில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
இதேபோல் தஞ்சாவூா்-கும்பகோணம் புறவழிச் சாலை அசூா் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வரும் மது பிரியா்கள் புறவழிச்சாலை பாலத்தின் கீழே சாலையிலேயே அமா்ந்து மது அருந்துகின்றனா்.
பின்னா், காலிபாட்டில்களை சாலையிலேயே விட்டு விட்டு செல்கின்றனா். சிலா் போதையில் உடைத்து விட்டும் செல்கின்றனா். இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனா். போதை அதிகமாகி கைகலப்பாகி சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்குளும் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மதுபிரியா்களை காவல்துறையினா் கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை: பேருந்து நிலையம், புறவழிச்சாலை பகுதியில் உள்ள மதுபான கடைகளின் அருகில் அமைந்துள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழி கோப்பைகள், பைகள், புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதை மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் சாலை ஓரத்தில் நெகிழி பொருள்கள் குவிந்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.