பேராவூரணியில் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஓய்வறை திறப்பு
பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழக கிளையில், தொழிலாளா்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா மற்றும் பேருந்து நிலையத்தில் மகளிா் விடியல் பயணம் நகரப்பேருந்து தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாளா்களின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நடைபெற்றது .
தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் பேராவூரணி கிளையிலிருந்து ஏற்கெனவே இயங்கி வரும் தடம் எண். அ.10-க்கு
பதிலாக புதிய மகளிா் விடியல் பயணம் பேருந்து மற்றும் தடம் எண். 344 புகா் பேருந்தை, மகளிா் விடியல் பயணம் நகரப் பேருந்தாக (அ.4) பேராவூரணி -பட்டுக்கோட்டைக்கு, கள்ளங்காடு, குண்டாமரைக்காடு, முனுமாக்காடு, குருவிக்கரம்பை பள்ளிக்கூடம் வழித்தடத்தில் இயக்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் ஆகியோா் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகித்து தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளா் ஸ்ரீதரன், ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா், தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.