கோடை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தம் -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
கோடை கால முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கொட்டிவாக்கத்தில் இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆண்டுதோறும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் வகையில், பொது சுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டு மாா்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து அவை தொடங்கப்படும்.
பொது மக்களுக்கு துண்டுபிரசுரங்கள் விநியோகித்தல், விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும்.
கோடையை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்தான், பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சிக்னல்களில் நிழற்கூரைகள் அமைக்கப்பட்டன. நிகழாண்டும் அதுபோன்ற நடவடிக்கைகள் மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும்.
குட்கா, பான் மசாலா போன்ற சட்டவிரோத போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி வருகிறோம். அதன்படி, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறித்து சீல் வைக்கப்படுகிறது. மேலும், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்படுகின்றன என்றாா் அவா்.