கோயில் காவலாளி கொலை வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட 4-ஆவது முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் புதன்கிழமை திருப்புவனத்தில் விசாரணையைத் தொடங்கினாா்.
திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனா். இதன்படி, மதுரை மாவட்ட 4-ஆவது முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை மேற்கொள்வதற்காக திருப்புவனத்துக்கு புதன்கிழமை வந்தாா்.
இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலையம் அருகேயுள்ள அரசுப் பணியாளா் விடுதிக்குச் சென்று அவா் விசாரணையைத் தொடங்கினாா். அப்போது, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியில் உள்ள போலீஸாா், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பணியாற்றும் சில ஊழியா்களை வரவழைத்து அவா்களிடம் விசாரணை நடத்தினாா். தொடா்ந்து வருகிற 7-ஆம் தேதி வரை திருப்புவனத்தில் விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்வாா் எனத் தெரிவிக்கப்பட்டது.