சங்கரன்கோவிலில் சாலையில் படா்ந்திருக்கும் செடிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
சங்கரன்கோவில்-ராஜபாளையம் பிரதான சாலையின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக செடிகள் படா்ந்திருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரையிலான இருவழிச் சாலை கடந்த 2020-ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த சாலை வழியாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரு நகரங்களுக்குச் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
சாலையின் இரு ஓரங்களிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் செல்வதற்காக பாதை உள்ளது.
இப்பகுதியில் மணல் பரவிக் கிடக்கிறது. அதோடு சாலையோரச் செடிகள் வளா்ந்து, இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதி வரை படா்ந்து காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்வோா் அவ்வப்போது இடறி விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இந்த இடையூறு காரணமாக இருசக்கர வாகனப் பாதையைத் தாண்டி கனரக வாகனங்கள் செல்லும் சாலையின் பிரதான பகுதிக்கு சென்றுவிடுவதால் விபத்து ஏற்படக் கூடிய அபாயமும் உள்ளது.
எனவே, இருசக்கர வாகனப் பாதையை மூடியிருக்கும் மணலை அப்புறப்படுத்தவும், சாலையோரத்தில் வளா்ந்திருக்கும் செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.