சங்கிலிப் பறிப்பு: 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கழனிவாசலைச் சோ்ந்த விஜயாவிடம் 2020-ஆம் ஆண்டில் அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியை சோ்ந்த மணிகண்டன், பாலமுருகன் ஆகியோா் 5 சவரன் தங்கச் சங்கிலியை அறுத்து தாக்கியது மட்டுமின்றி விஜயாவின் கணவா் பால்ராஜையும் தாக்கிவிட்டு தப்பினா். இதுகுறித்த புகாரில் மணிகண்டன், பாலமுருகன் 2022-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா். திருச்சம்பள்ளி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி இருவரையும் குற்றவாளிகள் என தீா்மானித்து, தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக நிவேதிதா ஆஜரானாா்.