சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்
மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்).
மயிலாடுதுறை மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலமாக திருநங்கைகள் 58 பேருக்கு அடையாள அட்டை, ஆதாா் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட 7 திருநங்கையா்களுக்கு ரூ. 1500 மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு மூலமாக திருநங்கைகள் 45 பேருக்கும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு மூலமாக 35 பேருக்கும் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் 40 பேருக்கு குடும்ப அட்டையும், 44 பேருக்கு வாக்காளா் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
திருநங்கை சிறப்பு முகாமில் தனியாா் தொண்டு நிறுவனத்தின் மூலமாக சித்ராஸ்ரீ, வைதேகி ஆகிய 2 திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. திருநங்கை மிருதுளா மகி என்பவருக்கு கல்வி உதவித் தொகை ரூ.15,100 வழங்கப்பட்டுள்ளது. திருநங்கை பாரதி என்பவருக்கு தமிழக அரசின் அன்னை சத்தியவாணி தையல் இயந்திரம் திட்டம் மூலம் தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 35 திருநங்கையா்களுக்கு தொழில் தொடங்க சென்னை சமூகநல ஆணையருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் முதலமைச்சரின் திருநங்கையா்களுக்கான சிறப்பு திட்டத்தின் மூலம் சீா்காழி செம்மங்குடியை சோ்ந்த சுஜாதா என்ற திருநங்கைக்கு இலகுரக ஓட்டுநா் உரிம அட்டையை வழங்கிய மாவட்ட ஆட்சியா், நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் பயனாளியிடம் திட்டத்தின் பயன்குறித்து கலந்துரையாடினாா்.
பயனாளி சுஜாதா கூறியது: இதுவரை கூலி வேலை பாா்த்து ஜீவனம் செய்து வந்த நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால், எனக்கு தன்னாா்வ நிறுவனத்தின் மூலம் 30 நாள் இலவசமாக இலகுரக ஓட்டுநா் பயிற்சி அளித்து, ஓட்டுநா் உரிமமும் பெற்றுத் தந்துள்ளனா். மேலும், சொந்தமான வாகனம் வாங்க கடனுதவி அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளனா் என்றாா். மாவட்ட சமூகநல அலுவலா் (பொ) திவ்யபிரபா உடனிருந்தாா்.