மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
Parithabangal: "'இதைப் பிடிச்சு எப்படியாவது மேல வந்திடு'னு சொன்னாங்க" - `பரிதாபங்கள்’ டிராவிட்
'பரிதாபங்கள்' வீடியோக்களின் டெம்ப்ளேட்டான சமூக வலைதளப் பக்கங்கள் எங்கும் நிறைந்திருக்கிறது.
தொடர்ந்து ட்ரெண்டிங் கன்டென்ட்களைக் கொடுப்பதில் 'பரிதாபங்கள்' கோபி - சுதாகர் ஓஜி என்றே சொல்லலாம்! இதற்கு பெரும் உதவியாக இருந்து வருபவர் டிராவிட்.
'பரிதாபங்கள்' வீடியோக்களில் கோபி - சுதாகர் ஒரு புறம் அட்டகாசம் செய்து கொண்டிருந்தால், டிராவிட் சைலன்ட்டாக வந்து அதகளப்படுத்திவிடுவார்.

அதன் மூலம் பார்வையாளர்களிடம் தனி கவனமும் பெற்றுவிடுவார். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களிலும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்துப் பேட்டிக் கண்டேன். 'பரிதாபங்கள்' காணொளிகளின் அதே நகைச்சுவை உணர்வோடே கலகலப்பாக உரையாடத் தொடங்கினார்.
'இதைப் பிடிச்சு எப்படியாவது மேல வந்திடு'
டிராவிட் பேசுகையில், "வணக்கம் ப்ரோ, இப்போ நான் சில திரைப்படங்களும் செய்திட்டு இருக்கேன். அதுல, இதயம் முரளி படத்துல நடிக்கவும் செய்திருக்கேன். அதே சமயம், வசனங்களும் எழுதியிருக்கேன்.
முதல்ல, என்னை நடிக்கிறதுக்காகத்தான் கூப்பிட்டாங்க. பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தின் ஸ்கிரிப்ட் கொடுத்துப் படிக்கச் சொன்னாங்க. ஆகாஷ் பாஸ்கரன் ப்ரோ எல்லா விஷயங்களையுமே கேட்டுத் தெரிஞ்சுப்பாரு.
அவர் சொல்றதைத் தாண்டி பிறர் சொல்வதையும் செவி கொடுத்துக் கேட்டு அதற்கு இடத்தையும் கொடுப்பாரு. அப்படி நான் சொன்ன சில விஷயங்கள் அவருக்குப் பிடிச்சிருச்சு.
உடனடியாக, என்னை உதவி இயக்குநர் குழுவிலும், வசனகர்த்தாவாகவும் படத்திற்குள் அழைத்தார். 'பரிதாபங்கள்' சேனலுக்காக நாங்க எப்படி வேலைகளைக் கவனிக்கிறோம்னு அவருக்கும் தெரியும்.
நான் சொன்ன விஷயங்கள் மூலமாக இவன்கிட்ட ஏதோ இருக்குனு என்னைப் படத்தின் எழுத்து வேலைகளுக்குள் சேர்த்துகிட்டாரு. அதற்கான அங்கீகாரத்தையும் திரைப்படத்தின் போஸ்டர்ல கொடுத்தது பெரிய விஷயம். கோபி - சுதாகர் அண்ணன்களுமே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
அதே சமயம், படத்தின் போஸ்டர்ல வரும் என்னுடைய பெயரைப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டாங்க. 'இதைப் பிடிச்சு எப்படியாவது மேல வந்திடு'னு என்னுடைய ரெண்டு அண்ணன்களுமே வாழ்த்தினாங்க." என உற்சாகத்துடன் தொடர்ந்தவர், "ஒன்ஸ் மோர் படத்திலும் நான் நடிச்சிருக்கேன்.
அதுல நீங்க வேற மாதிரியான ஒரு டிராவிட்டை எதிர்பார்க்கலாம். ஒரு ஃபேமிலி மேன் வேடத்துல நடிச்சிருக்கேன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் யுவராஜ் ப்ரோதான் அந்தத் திரைப்படத்திற்காக என்னைக் கூப்பிட்டாரு.
இதைத் தாண்டி பிரதீப் ரங்கநாதன் ப்ரோகூட டியூட் படத்திலும் நடிச்சிருக்கேன். அதுல நீங்க டிராவிட்டோட அசல் உருவத்தை எதிர்பார்க்கலாம். படத்திற்காக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ரிஹர்சல் வச்சு என்னைப் பற்றிய நிறைய விஷயங்கள் கேட்டு அந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்குச் சேர்த்துகிட்டாரு.
எல்லோரும் இப்படியான ஒரு கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசை இருக்கும். எனக்கு அது டியூட் படத்துல அமைஞ்சிருக்கு. காமெடியைத் தாண்டி குணச்சித்திர கேரக்டர்ல நடிச்சிடணும்னு எனக்கு ஆசை இருந்தது. அது இது மூலமாக நிறைவேறி இருக்கு.
டிராவிட்டோட பர்சனல் உருவமும் அந்த கேரக்டர்ல கலந்திருக்கு ப்ரோ. அந்தப் படமும் நல்லா வந்திருக்கு. பிரதீப் ரங்கநாதன் ப்ரோ ஒரு ப்ரண்ட் மாதிரிதான். தோள்ல கைபோட்டு நிறைய விஷயங்கள் பேசுவார். 'பரிதாபங்கள்' வீடியோ பார்த்துட்டு ஷூட்டிங்ல அந்தந்த வீடியோ பற்றியும் பேசுவார். ப்ரதீப் ப்ரோ எங்க வீடியோ பார்ப்பாருனு தெரியும்.
அவர் சுதாகர் அண்ணனை லவ் டுடே படத்துல நடிக்க வைக்க முயற்சி செஞ்சதாகவும் சொல்லியிருக்கார். என்னுடைய நடிப்பைத் தனியாகவும் கவனிச்சதாகவும் குறிப்பிட்டிருக்கார். அதே மாதிரிதான், இதயம் முரளி படத்துல அதர்வா ப்ரோவும் வீடியோஸ் பார்த்துட்டு வந்து அது தொடர்பாகப் பேசுவார்.
பரிதாபங்களோட திரைப்படமான 'ஓ காட் ப்யூட்டிஃபுல்' படத்தின் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டிடுச்சு. சிவகார்த்திகேயன் அண்ணா பாடியிருந்த பாடல் சமீபத்துல வெளியாகியிருந்தது." என்றார் மகிழ்ச்சியுடன்.
நான் யாருனு நானே கண்டுப்பிடிக்கல
தொடர்ந்து பேசிய அவர், "யூட்யூப்ல இருந்து சினிமாவுக்கு வரும்போது என் மேல வைக்கிற ஸ்டிரியோடைப்களை உடைக்கணும்னு நான் இப்போ வரைக்கும் யோசிக்கல.
நான் இன்னும் யாருனு நானே இன்னும் கண்டுப்பிடிக்கல. யூட்யூப், சினிமானு ரெண்டுமே வேற வேற மீட்டர். ஆடியன்ஸ்கிட்ட இருந்து கிடைக்கிற வரவேற்பை வச்சுதான் என்னை நான் மெருகேற்றணும். 'பரிதாபங்கள்' சேனல்ல இருந்து வரும்போது மக்கள் சில விஷயங்கள் எதிர்பார்ப்பாங்க.

அதைப் பொறுப்பாக எடுத்துகிட்டு செயல்படுத்தணும். சொல்லப்போனால், அப்படியான பொறுப்பு ஒருத்தனுக்கு தேவை. முதல்ல முழுமையாகக் கத்துக்கணும். இப்போ நானும் கத்துக்கிற பகுதியில இருக்கேன்.
எனக்குக் கிடைக்கிற கதாபாத்திரங்கள்ல அனைத்திலுமே நான் நடிக்கதான் இப்போ வரை திட்டம் வச்சுருக்கேன். விஷயங்களைத் தெரிஞ்சு புரிஞ்சுகிறேன். அதேசமயம், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில நடிக்கணும்.
பிறகு மற்ற விஷயங்களைப் பார்க்கலாம்." என்றவரிடம் "பாடலாசிரியராக அறிமுகமாகுறீங்களாமே..." எனக் கேட்டதும், "ஆமா ப்ரோ, சின்ன வயசுல இருந்தே நான் கவிதைகள் எழுதுவேன்.
இப்போதான் நான் எழுதுவதைச் சரியாக ஆவணப்படுத்திட்டு வர்றேன். என் நண்பர் ஒருத்தர்தான் எழுதுவீங்களானு கேட்டு என்னை எழுத வச்சார். அப்படித்தான் வாய்ப்பு வந்து எழுதத் தொடங்கினேன்.
பாடலும் நல்லபடியாக வரணும்." என்றவர், "முக்கியமாக, என்னுடைய எல்லா தருணத்திலும் என்னுடைய குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்திருக்காங்க.

இந்த மாதிரியான கனவுகளோடு நான் பயணிக்க ஆரம்பிச்சப்போ அவங்களுக்கு பயம் இருந்தது. இப்போ, என்னுடைய மனைவி எனக்கு உறுதுணையாக இருக்காங்க.
சினிமாகாரர்களின் கதை ஒரு ராத்திரியில எப்படி வேணாலும் மாறலாம். எனக்காகப் பல விஷயங்களை அவங்க திட்டமிட்டு செய்யுறாங்க. 'பரிதாபங்கள்' வீடியோஸ்ல வர்ற என்னுடைய லேடி கேரக்டர்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்னுடைய அம்மா, தங்கச்சி, மனைவிதான்." என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்துக் கொண்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...