மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.
மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ்வியல் முறை, மனஅழுத்தம், நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மனிதர்களின் சராசரி வயது குறைந்து வருகிறது.
கரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, 40 வயதுக்கு உட்பட்ட இளையோர்களுக்குகூட திடீர் மாரடைப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இருப்பினும் உழைப்பு, முறையான உடற்பயிற்சி மற்றும் இயற்கை உணவு பழக்கம் ஆகியவற்றை தொடர்ந்து வரும் கிராமப்புறங்களில் 100 வயதைக் கடந்தும் முதியவர்கள் பலர் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.
வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து கவுண்டர் மனைவியும், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய திமுக தலைவர் பழனிமுத்துவின் தாயாருமான உமையாள்புரத்தாள் (எ) பொட்டியம்மாள் (108). சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளியான இவர், இயற்கையான காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை தனக்குத் தானே சமைத்து உண்டு வாழ்ந்து வந்தார். தனது தேவைகளை தானே செய்து கொண்டார். நூறு வயதை எட்டும் வரை கிணற்றில் குதித்து நீச்சல் அடித்து குளித்து வந்தார்.
107 வயதைத் தாண்டிய மூதாட்டி பொட்டியம்மாள், தனது வாழ்நாளில் பெருமளவில் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொண்டதில்லை. ரவிக்கை மேலாடை அணிந்ததில்லை. இயற்கையான பாட்டி வைத்திய முறைகளையே பின்பற்றி வந்தார்.
அண்மையில் தவறி விழுந்த இவர், உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்றிரவு (ஆக. 14) உயிரிழந்தார்.
இவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுன்றி கிராம மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.