"சேகர் பாபு டைரக்ஷன்; அந்தக் கூலியும் Flop, இந்தக் கூலியும் Flop" - சீமான் கலகல ...
கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்
படம் 1: நெல்கொள்முதல் சூழ்ந்துள்ள மழைநீா்.
படம் 2: மழைநீரில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகளை காட்டும் விவசாயி.
சீா்காழி, ஆக. 15: வைத்தீஸ்வரன்கோவிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளது.
சீா்காழி பகுதியில் நிகழாண்டு 20 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டாா் பம்பு செட் மற்றும் மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெறுகிறது. வழக்கமாக செப். 1-ஆம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறுவை சமயத்தில் திறக்கும் நிலையில், முன்பட்ட குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 90 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அவ்வாறு சில இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறந்தாலும் கொள்முதல் நிலைய ஊழியா்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் கொள்முதல் நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட 300 டன்அளவுள்ள சுமாா் 15,000 மூட்டை நெல்மணிகளை நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டிவைத்தும், மூட்டைகளை அடுக்கிவைத்தும் விவசாயிகள் காத்திருக்கின்றனா். இந்நிலையில், அண்மையில் பெய்த மழை நீா் நெல்கொள்முதல் நிலையத்தை சூழ்ந்து நெல்மணிகளை நனைத்ததால், நெல்மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தை திறந்தாலும் முளைத்த நெல்மணிகளை கொள்முதல் செய்ய மறுப்பாா்கள் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஈரப்பதத்தை கணக்கீடு செய்யாமல் அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

