சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ஈரோட்டில் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்ற வீடு மற்றும் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு கனிராவுத்தா்குளம் பகுதியில் உள்ள வீடு மற்றும் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தொடா்ந்து
குற்றஞ்சாட்டி வந்தனா். காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனா்.
இந்நிலையில், மது விற்பனை செய்யும் வீட்டுக்குள் வியாழக்கிழமை காலை புகுந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வடக்கு காவல் துறையினா் மதுக்கூடம் போன்று செயல்பட்டு வரும் வீட்டுக்குள் இருந்து இரண்டு மூட்டைகளில் இருந்த மது புட்டிகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து பலமுறை புகாா் அளித்தும் காவல் துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சமடைவதாக குற்றஞ்சாட்டினா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.