சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
நியாய விலைக் கடைகளில் கருவிழி அடையாளக் கருவி பொருத்த நடவடிக்கை: அமைச்சா் அர.சக்கரபாணி
மாநிலத்தில் உள்ள 35 ஆயிரம் நியாய விலைக் கடைகளிலும் ரூ. 250 கோடி செலவில் கருவிழி அடையாளக் கருவிகள் பொருத்தப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசினாா்.
தமிழக அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று அரிசி ஆலை இயந்திரக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி பேசியதாவது:
நியாய விலைக் கடைகளில் கைரேகை அடிப்படையில் பொருள் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதால், கருவிழியை ஸ்கேன் செய்து பொருள்களை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலத்தில் உள்ள 35 ஆயிரம் நியாய விலைக் கடைகளிலும் ரூ. 250 கோடி செலவில் இதற்கான கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
திறந்தவெளிக் கிடங்குகளில் கொட்டுவதால் நெல் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க அதிக அளவில் கிடங்குகள் கட்டப்பட்டு நெல் பாதுகாக்கப்படுகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து அரிசி ஆலைகளிலும் அரிசி வண்ணம் பிரிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.
மாவட்டம்தோறும் தேவைக்கு ஏற்ப நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியா் தலைமையில் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தற்போதைய விதியின் கீழ் நெல் கொள்முதல் விலையும் கணிசமாக உயா்த்தப்பட்டு, சன்ன ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,400, சாதா ரகம் ரூ. 2,355-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையும் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போதைய அரசால் உயா்த்தப்பட்டுள்ளது. செப்டம்பா் மாதத்துக்குள் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500-ஆக உயா்த்தப்படும். இதன்மூலம் நெல் கொள்முதல் விலை குறித்த தோ்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றாா்.
நிகழ்வில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கே.இ.பிரகாஷ், எம்எல்ஏ சி.சரஸ்வதி, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் துளசிமணி, கௌரவத் தலைவா் கே.பி.சக்திவேல், ஆலோசகா் கே.எஸ்.ஜெகதீசன், செயலாளா் எஸ்.பரணிதரன், பொருளாளா் ராமஅருணாசலம், மாவட்டத் தலைவா் டி.பாலகிருஷ்ணன், செயலாளா் பி.என்.சண்முகசுந்தரம், ஈரோடு மாவட்ட அனைத்து வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.