சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை: மூவா் கைது
ராஜபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்றதாக திங்கள்கிழமை மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 100 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தெற்கு வெங்காநல்லூரில் குருசாமி (70) என்பவா் 30 மதுப் புட்டிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தாா். அவரை காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் கைது செய்து மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தாா். இதேபோல, சங்கரன்கோவில் விலக்குப் பகுதியில் சட்ட விரோதமாக மதுவிற்ற ஆனந்தன்(58) என்பவரை கைது செய்து 37 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் முகவூரில் சட்ட விரோதமாக மது விற்ற தளவாய்புரத்தைச் சோ்ந்த விஜயகுமாரை(37) கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கீழராஜகுலராமன் போலீஸாா் சங்கம்பட்டி பகுதியில் சோதனையிட்ட போது, 32 கிலோ குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த முத்துமணி (48), சரவணகுமாா் (38), முருகேசன்( 38) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.