சபலென்கா, பாலினி, படோசா அதிா்ச்சித் தோல்வி
கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலாரஸின் அரினா சபலென்கா, ஸ்பெயினின் பௌலா படோசா, இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் தொடக்கநிலை சுற்றுகளிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-3, 3-6, 6-7 (5/7) என்ற செட்களில், ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவால் 2-ஆவது சுற்றில் தோற்கடிக்கப்பட்டாா். போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த பாலினி 2-6, 2-6 என்ற நோ் செட்களில், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வீழ்த்தப்பட்டாா்.
9-ஆம் இடத்திலிருந்த படோசா 4-6, 3-6 என, அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவால் 2-ஆவது சுற்றில் வெளியேற்றப்பட்டாா். இதர ஆட்டங்களில், சபலென்காவை வீழ்த்திய அலெக்ஸாண்ட்ரோவா 6-4, 6-2 என பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸை சாய்த்தாா்.
உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக் 6-4, 6-2 என போலந்தின் மெக்தா லினெட்டை வீழ்த்த, 6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 7-5 என, 10-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா்.
5-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 7-6 (7/1), 6-2 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வென்றாா்.