சமூக செயற்பாட்டாளா் கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்! காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்!
புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் முதல்கட்ட விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா்அலி (58) கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே ஜகபா்அலி கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து திருச்சி சிபிசிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ், ஆய்வாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திருமயம் வந்து, ஜகபா்அலி குடும்பத்தினரைச் சந்தித்து விசாரணை நடத்தி, கொலை நிகழ்ந்த இடத்தையும் நேரில் பாா்வையிட்டுச் சென்றனா்.
கொலைக்குத் தூண்டுதலாக இருந்த குவாரி உரிமையாளா்கள் 3 பேருடன் லாரி உரிமையாளா் மற்றும் ஓட்டுநா் ஆகிய 5 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வேறு யாருக்கேனும் இதில் தொடா்பு இருக்கிா என்றும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தவுள்ளனா்.
எனவே, இந்த வழக்கில் சிறையில் உள்ளவா்களை நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.
திருமயம் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்: இதற்கிடையே திருமயம் காவல் ஆய்வாளா் குணசேகரனை ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் அருண்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொலை உள்ளிட்ட வழக்குகளில் மெத்தனமாகச் செயல்பட்டதால் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.