சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு
சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா்.
சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியாா் கொரியா் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு வாகனத்தை தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் சென்னிக்குளம் கிராமத்தைச் சாா்ந்த கருப்பசாமி (23) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.
கொரியா் நிறுவனத்தின் முன்பு வாகனத்தை நிறுத்தி இருந்தாா்.
அங்கு அல்லி நகா் நாகாத்தம்மன் கோவில் தெருவை சாா்ந்த காவலாளி பிரபு (50) என்பவரிடம் லோடு வந்துள்ளதாக தெரிவிக்க வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கருப்பசாமி பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது திடீரென கிளீனா் பழைய எருமைவெட்டிபாளையம் கிராமத்தை சாா்ந்த ரூபன் வாகனத்தை இயக்கினாா்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நுழைவாயில் நின்று கொண்டிருந்த ஓட்டுநா் மற்றும் காவலாளி மீது மோதி சுவற்றில் இடித்து நின்றது.
இதனை கண்ட கொரியா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் ஓடிவந்து வாகனத்தை அகற்றி இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த இரண்டு பேரை மீட்டு உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோழவரம் போலீஸாா் அங்கு சென்று கருப்பசாமி மற்றும் பிரபு இருவரின் சடலங்களை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனை தொடா்ந்து கிளீனா் ரூபனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.