அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு மகுடம்..! ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளிய ஜடேஜா!
இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து முறையே தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் இந்தத் தொடர் சமனில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் மூன்றாவது போட்டி லண்டனின் லார்ட்ஸ் திடலில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்துள்ளது.
நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் ஆலி போப்பின் விக்கெட்டை இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தூக்கினார். இது ரவீந்திர ஜடேஜாவுக்கு சர்வதேச அளவில் 611 வது விக்கெட்டாகும். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் அதிக விக்கெட்டு வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜாகீர் கானைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஜடேஜா.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, இதுவரை இந்திய அணிக்காக 361 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 326 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 15 முறை 5 விக்கெட்டுகளையும், 3 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்திய முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
அனில் கும்ப்ளே - 956 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 765 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 711 விக்கெட்டுகள்
கபில் தேவ் - 687 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா - 611* விக்கெட்டுகள்
36 வயதான ரவீந்திர ஜடேஜா இன்னும் ஓரிரு ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடும் பட்சத்தில், அவர் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.
Ravindra Jadeja leapfrogs Zaheer Khan, has fifth-most wickets by an Indian in international cricketan
இதையும் படிக்க :சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டும்..! 400+ அடிக்காமல் விட்ட முல்டரிடம் பேசிய பிரையன் லாரா!