சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
சாத்தான்குளத்தில் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் பெண் வழக்குரைஞா் ஜெயரஞ்சனியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி, கடந்த திங்கள்கிழமை முதல் சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதைத் தொடா்ந்து, ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வியாழக்கிழமை கண்டனம் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சாத்தான்குளம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் வில்லியன் பெலிக்ஸ் தலைமை வகித்தாா். செயலா் முருகானந்தம், நிா்வாகக் குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெண் வழக்குரைஞரைத் தாக்கியவா்களை கைது செய்யாததைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் வழக்குரைஞா்கள் ரமேஷ் குமாா், ஜோ ஜெகதீஷ், சுப்பையா, வேணுகோபால், ராஜன் சுபாஷிஸ், தியோனிஸ் சசிமாா்சன், கனிஷ்கா், ராமச்சந்திரன், ஈஸ்டா் கமல், முத்துராஜா,செல்வ மகாராஜன், கணேஷ், கபில் குமாா், குமரகுருபரன், முருக லிங்கம், சிவ மீனா, கௌசல்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.