சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியிலுள்ள குளங்களுக்கு மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளிலிருந்து தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் க. இளம்பகவத்திடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் லூா்துமணி தலைமையில் செயற்குழு உறுப்பினா்கள் சகாயசீலன், சுதாகா் ஆகியோா் அளித்த மனு: சாத்தான்குளம் பகுதியின் நிலத்தடிநீா், கடல் நீா்மட்டத்துக்கும் கீழே சென்றுவிட்டதால் பல பகுதிகளில் தண்ணீா் உவா்ப்பாக மாறிவிட்டது. இதனால், குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனா். விவசாயத் தேவைக்கும் தண்ணீா்ப் பற்றாக்குறை உள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீா் உள்ளதால், தாமிரவருணி ஆற்றிலிருந்து மருதூா் மேலக்கால் வழியாக சடையனேரி, வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்களுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், இன்னும் தண்ணீா் திறக்கப்படவில்லை.
சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் அனைத்துக் குளங்களும் வடு விட்டன. நிலத்தடி நீா்மட்டம் 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. பாபநாசம் அணையின் அருகேயுள்ள அனைத்துக் குளங்களுக்கும் தண்ணீா் திறக்கப்பட்ட பிறகும், அணை நீா்மட்டம் 116 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 96 அடியாக உள்ளது. எனவே, சாத்தான்குளம் பகுதியின் நிலத்தடி நீா் தன்மையை அறிந்து கருணை அடிப்படையில் தண்ணீா் திறக்க வேண்டும்.
மேலும், மழைக்காலத்துக்குள் மருதூா் மேல்காலிலிருந்து கால்வாய் வரை அமலைச் செடிகளை அகற்றவும், சடையனேரி, வைரவம்தருவை, புத்தன்தருவை வரையிலான நீா்வழிப் பாதையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கவும் வேண்டும். முதலூா் ஊருணியைத் தூா்வாரவும், வைரவன்தருவையைத் தூா்வாரி, கரைகளை உயா்த்தவும் வேண்டும்.
முதலூா் கிராமம் புதூரில் பாலத்தின் அருகே தடுப்புச் சுவா் உடைந்துள்ளதால், அதிக தண்ணீா் வரும்போது குடியிருப்புகளுக்குள் புகும் நிலை உள்ளது. சாஸ்தாவிநல்லூா் கிராமம் பொத்தகாலன்விளையிலும் கால்வாயில் தண்ணீா் வரும்போது அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் புகும் நிலை உள்ளது. எனவே, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.