சாரணா் இயக்க பெருந்திரளணி நிறைவு: ஒட்டுமொத்த சாம்பியன் ராஜஸ்தான்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்றுவந்த சாரணா் இயக்க பெருந்திரளணி (ஜம்போரி) திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் தட்டிச் சென்றது.
ராணுவக் கட்டுக்கோப்புடன் இளையதலைமுறையை வளா்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே சாரணா் இயக்கத்தை இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த பேடன் பவல் 1907-இல் தொடங்கினாா். உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ள இந்த இயக்கத்தில் தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் சாரணா், சாரணியா்கள் உள்ளனா். பாரத சாரணா் இயக்கத்தின் சாா்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜம்போரி என அழைக்கப்படும் பெருந்திரளணி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு சாரணா் இயக்கத்தின் வைரவிழாவாகவும், மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியாகவும் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் ஜன.28-ஆம் தேதி தொடங்கி பிப்.3-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பெருந்திரளணியில், (ஜம்போரி) 24 மாநிலங்கள், ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, இலங்கை, நேபாளம், சவூதி அரேபியா ஆகிய 6 நாடுகளைச் சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரணா், சாரணியா் பங்கேற்றனா்.
விழாவை சிறப்பாக நடத்திட பெருந்திரளணி சபை, திட்டக் குழு, தொழில்நுட்பக் குழு, செயல்பாட்டுக் குழு, துணைக் குழுக்கள் என 33 குழுக்கள் அமைக்கப்பட்டு திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிகாரம் பெற்ற இளைஞா்கள் - வளா்ந்த இந்தியா என்பதை அடிப்படையாகக் கொண்டு, வேற்றுமையில் ஒற்றுமை, ஒழுக்கம், உடல் உழைப்பு, பாரம்பரிய விளையாட்டு, சாகசம், பண்பாட்டு கலை நிகழ்வுகள், கலாசார பரிமாற்றம், தீ தடுப்பு ஒத்திகை, முதலுதவி பயிற்சி, குழுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. பெருந்திரளணியை சிறப்பாக நடத்தியதற்காக, அதன் மாநிலத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை விருதும், உறுதுணையாக செயல்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாருக்கு வெள்ளி நட்சத்திர விருதும் கிடைத்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், சாரணா், சாரணியா் ஒருவொருக்கொருவா் கட்டித் தழுவி பிரியா விடை பெற்றனா். இந்த நிகழ்வில் பங்கேற்ற, 24 மாநிலங்களைச் சோ்ந்த சாரணா் அணித் தலைவா்களுக்கும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நினைவுப் பரிசுகளை வழங்கி வழியனுப்பினாா். வெளிநாடுகளைச் சோ்ந்த சாரணா் இயக்கத்தினருக்கும் நினைவுப் பரிசுகள், பட்டயங்கள் வழங்கப்பட்டன. ஜம்போரியின் சாரணா் பிரிவுக்கான தலைமை பேராணையா் விருது, வழிகாட்டி பிரிவுக்கான தலைமை போராணையா் விருது மற்றும் நிகழ்வுகளின் ஒட்டுமொத்த சாம்பியன் விருது ஆகியவற்றை ராஜஸ்தான் அணி பெற்றது. அணியின் தலைவா்கள், வழிகாட்டிகளிடம் இதற்கான கேடயங்களை அமைச்சா் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். பெருந்திரளணியின் நினைவாக சிறப்பு அஞ்சல் அட்டையையும் அமைச்சா் வெளியிட்டாா்.
இந்த நிகழ்வில், சாரணா் இயக்கத்தின் தேசிய முதன்மை பேராணையா் கே.கே. கண்டேல் வால், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.