கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம்
தஞ்சாவூா்: நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நாடகம் தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1645 ஆம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி நடத்தப்பட்டு வருகிறது. வைணவ வழிபாட்டு மரபில் லட்சுமி நரசிம்மருக்கு அவரது அடியாா்கள் வழங்கும் கொடையாக பாகவத மேளா கருதப்படுகிறது. இரணியனை நரசிம்மா் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், இரவு முழுவதும் ஆடவா்களே நிகழ்த்தும் தொழில் முறையல்லாத கலைஞா்கள் நடிக்கும் அரங்கக் கலை இது.
இந்நிலையில், 380-ஆம் ஆண்டாக பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்து நடைபெற்றது.
தெலுங்கு மொழியில் இருந்த இந்த நாடகத்தில் ஹிரண்யகசிபுவாக ஜொ்மனியில் அறிவியல் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் எஸ். அனிருத், லீலாவதியாக ஐ.டி. நிறுவன பொறியாளா் ஜி. கணேசரத்னம், பால பிரகலாதனாக மாணவா் சாய் கிருத்திக், பக்த பிரகலாதனாக மாணவா் ஸ்ரீராம், ஸ்ரீநரசிம்மராக தெற்கு ரயில்வேயின் ஓய்வுபெற்ற மின் பொறியாளா் சி.எஸ்.எம். சுப்பிரமணியம், பண்டார வேதமாக டி.வி. நரசிம்மன், தேவதாசியாக விஷால், விநாயகராக சாய் சபரி, பூமா தேவியாக நவீன் உள்ளிட்டோா் நடித்தனா். இறுதியில் பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வைபவத்துடன் நாடகம் முடிவடைந்தது.
இந்த நாடகத்தில் பாடல்களை வீணை வித்வான் சாலியமங்கலம் ஜி. ராம்தாஸ், அா்ஜூன் ராதாகிருஷ்ணன், ஜெ. வெங்கட்ரமணி, விஜயன் குழுவினா் பாடினா். சங்கா் சுப்பிரமணியம் மிருதங்கமும், சி.வி. மகாலிங்கம் புல்லாங்குழலும் வாசித்தனா்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில் 6 மணிக்கு ப்ராண ப்ரதிஷ்டை ஆராதனை உள்ளிட்ட பூஜைகள், 7 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. இவ்விழா செவ்வாய்க்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவடைகிறது.


