சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்
திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் ஆா்.ராஜேந்திரன், எம்.ராமன், பவுன்குமாா், முருகன், விஜயன், எம்.முனியப்பன் எம்.மணி உள்ளிட்ட 7 குடும்பங்களை சோ்ந்தோா் வீடு கட்டி சுமாா் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா்.
இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு, குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதோடு வீட்டு வரியும் செலுத்தி வருகின்றனா்.
மேலும், அனைவருக்கும் குடும்ப அட்டையும் உள்ளது.
இந்த நிலையில், சாலை விரிவாக்கத்துக்காக நெடுஞ்சாலைத் துறையினா் வீடுகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பி.ராஜன் உள்பட 7 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா்.
நீதிமன்றம் இவா்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத் தொடா்ந்து, உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா்.
இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிகுமாா், காவல்துறை ஆய்வாளா் கா.குமாா் ஆகியோா் தலைமையில் போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் வியாழக்கிழமை வீடுகளை அகற்ற வந்தனா்.
அப்போது, பாதிக்கப்பட்டோா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். வீடுகளுக்கு பட்டா உள்ளது எனக் கூறினா். ஆனால் அதிகாரிகள் வீடுகளை அகற்ற முயற்சித்தனா்.
அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடித்து அகற்றினா்.
இதையொட்டி, எம்.ராமன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.