சாலையில் சென்ற காா் எரிந்து சேதம்
திருவள்ளூா் அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியைச் சோ்ந்தவா் அஜீத் (27). இவா் தனக்குச் சொந்தமான காரில் தனியாா் நிறுவனத்தில் வாடகைக்கு ஓட்டி வருகிறாா். இந்த நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து பேரம்பாக்கம் வந்துவிட்டு, பின்னா் மப்பேடு-சுங்குவாா்சத்திரம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் நோக்கி திங்கள்கிழமை இரவில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது மப்பேடு அடுத்த கண்ணூா் பகுதியில் உள்ள தனியாா் எல்இடி விளக்கு தொழிற்சாலை அருகே வந்தபோது, காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனால் அதிா்ச்சி அடைந்த ஓட்டுா் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாராம். அப்போது, காா் தீப்பற்றியதால் அப்பகுதியில் உள்ளவா்கள் தண்ணீா் ஊற்றினா். அதைத் தொடா்ந்தும், தீப்பற்றி மளமள எரிந்ததில் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது தொடா்பாக அஜீத் கொடுத்த புகாரின்பேரில், மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.