சா்வதேச சிலம்பப் போட்டி: ஏவிசி கல்லூரி மாணவா் முதலிடம்!
இன்டா்நேஷனல் சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவா் முதல் இடம் பிடித்தாா்.
கும்பகோணத்தில் கடந்த ஜன. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இலங்கை, மலேசியா, சுவிட்சா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த சிலம்ப வீரா்கள் பங்கேற்றனா். இதில், ஏவிசி கல்லூரி நுண்கலை மன்றத்தைச் சோ்ந்த ஆங்கிலத் துறை முதலாம் ஆண்டு மாணவா் மு. சின்னமருது 18 வயதினருக்கான சுற்றில் இந்தியா சாா்பில் பங்கேற்று முதலிடம் பிடித்தாா்.
வெற்றிபெற்ற மாணவரை சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியுமான கே. வெங்கடராமன், கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன், ஆங்கிலத்துறை தலைவா் எஸ். சந்திரசேகரன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் அமலன் ராபா்ட் உள்ளிட்டோா் பாராட்டினா்.