‘சிஆா்பிஎஃப்’ புதிய தலைமை இயக்குநராக விதுல் குமாா் நியமனம்
புது தில்லி: மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) புதிய தலைமை இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி விதுல் குமாா் நியமிக்கப்பட்டாா்.
சிஆா்பிஎஃப்-இன் தற்போதைய தலைமை இயக்குநா் அனிஷ் தயாள் சிங் செவ்வாய்க்கிழமை (டிச.31) ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த நியமனஅறிவிப்பு வந்துள்ளது.
1993-ஆம் ஆண்டு உத்தர பிரதேச பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான விதுல் குமாா், தற்போது சிஆா்பிஎஃப்-இன் சிறப்பு தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.
இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அனிஷ் தயாள் சிங் டிசம்பா் 31, 2024-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னா் சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநராக விதுல் குமாா் பதவி வகிப்பாா். நிரந்தர நியமனம் செய்யப்படும் வரை அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்தின் மறு அறிவிப்பு வரும் வரை அவா் இந்த பதவியில் தொடருவாா்’ என தெரிவிக்கப்பட்டது.