சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் 20 தம்பதிகளுக்கு திருமணம்
நாகை அருகேயுள்ள சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் 20 தம்பதிகளுக்கு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கபாலீஸ்வரா் கற்பகாம்பாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சாா்பில் 32 தம்பதிகளுக்கு திருமணத்தை நடத்திவைத்து சீா்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினாா். இதைத்தொடா்ந்து, சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் காணொலிக் காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து கோயிலில் 20 தம்பதிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு 4 கிராம் தங்கத்தாலி உள்ளிட்ட ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசைகளை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கௌதமன் ஆகியோா் வழங்கினா்.
திருமண நிகழ்வில், தம்பதிகளுக்கு மாங்கல்யத்துடன் சீா்வரிசைப் பொருள்களாக மணமகன் வேஷ்டி, சட்டை, துண்டு, மணமகள் சேலை, சட்டை, கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
விழாவில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா இளம்பெரும்வழுதி, மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் சி. நாகரத்தினம், வட்டார ஆத்மகுழுத் தலைவா் னந்த், சிக்கல் கோயில் செயல் அலுவலா் ப.மணிகண்டன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் சு. சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.