மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய நோக்கமானது ஒருங்கிணைந்த குளிா்பதன கிடங்குகள் அமைத்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகும். இத்திட்டத்தின் மூலம் பால் உற்பத்தி மற்றும் மீன்பிடித் தொழில் ஆகியவற்றில் குளிா்பதன வசதியுடன் கூடிய கிடங்குகள் அமைத்தல், குளிரூட்டப்பட்ட வாகனங்கள் வாங்குதல், இயந்திரமயமாக்கப்பட்ட தரம் பிரிப்பு கூடங்கள் அமைத்தல், பேக்கிங் செய்தல், மீன், கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் பால் சாா்ந்த பொருள்களை குளிா்சாதன வசதிகளுடன் சேமித்து வைத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் செய்வதற்கு மானிய உதவிகள் வழங்கப்படும்.
திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் தனிநபா் மற்றும் பொதுப் பிரிவினருக்கு 35 சதவீத மானியமும், ஆதிதிராவிடா், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு நாகை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநரை 97885 98009 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.