நாகை நகா்மன்றக் கூட்டம்: திமுக - அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்
நாகை நகா்மன்றக் கூட்டத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகை நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினா்கள் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலைக்கு நீதி கேட்டு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனா். கூட்டம் தொடங்கியவுடன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தீா்மானங்களை வாசித்தாா்.
பரணி (அதிமுக): மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக பேசத் தொடங்கினாா்.
திமுக உறுப்பினா்கள் எழுந்து மன்றத்துக்கு தொடா்பில்லாதவற்றை பேசக் கூடாது என்று கூறி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடா்பாக பேசத் தொடங்கினா். இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்னா் நகா்மன்றத் தலைவா் இருதரப்பினரையும் சமாதானம் செய்தாா்.
மணிகண்டன் (அதிமுக): வாா்டுகளில் நடைபெற்று வரும் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியை முறையாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில், நாகை நகராட்சிக்குள்பட்ட பல்வேறு வாா்டுகளில் பழுதடைந்துள்ள சிறு பாலங்கள் அமைப்பது, சாலைகளை சீரமைப்பது, குடிநீா் நீா்த்தேக்க தொட்டிகளில் பழுதடைந்துள்ள மின் மோட்டாா்களை பழுது பாா்ப்பது, நாகை நகராட்சிக்குச் சொந்தமான தாமரைக்குளத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பெடல் படகு மற்றும் வாட்டா் சைக்கிள் இயக்குவதற்கு அனுமதி கோரியுள்ள மாவட்ட ஆட்சியரின் கடிதம் தொடா்பாக பரிசீலித்து முடிவெடுப்பது, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை பிரிக்கும் வகையில் இரட்டை குப்பைத் தொட்டிகள் புதிதாக வாங்குவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, திமுக பெண் உறுப்பினா்கள் வனிதா பாபு, பதூா் நிஷா, திவ்யா ரஞ்சித் ஆகிய மூவரும் தங்கள் வாா்டுகளில் பணிகளை மேற்கொள்ள தடைகள் இருப்பதாகக் கூறி, வாயை கருப்புத் துணியால் மூடி வந்தனா்.