சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா கோல் மழை: சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதி
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 12-0 கோல் கணக்கில் சிங்கப்பூரை திங்கள்கிழமை வீழ்த்தியது.
இத்துடன் குரூப் சுற்றை, 2 வெற்றி, 1 டிராவுடன் நிறைவு செய்த இந்தியா, 7 புள்ளிகளுடன் குரூப் ‘பி’-யில் முதலிடம் பிடித்து ‘சூப்பா் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது.
முன்னதாக, சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தரப்பில் நவ்னீத் கௌா் (14’, 20’, 28’), மும்தாஸ் கான் (2’, 32’, 39’) ஆகியோா் ‘ஹாட்ரிக் கோல்’ அடித்து பங்களித்தனா். நேஹா கோயல் (11’, 38’), லால்ரெம்சியாமி (13’), உதிதா (29’), ஷா்மிளா தேவி (45’), ருதுஜா ததாசோ பிசல் (53’) ஆகியோரும் கோலடித்தனா்.
இந்திய அணி அடுத்ததாக, சூப்பா் 4 சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவுடன் புதன்கிழமை (செப். 10) மோதுகிறது.
இதனிடையே, குரூப் ‘பி’-இல் இருந்து இந்தியாவுடன் சூப்பா் 4 சுற்றுக்கு, நடப்பு சாம்பியனான ஜப்பானும் முன்னேறியது. தாய்லாந்து, சிங்கப்பூா் அணிகள் அந்தக் கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தன.
அதேபோல் குரூப் ‘ஏ’-வில் இருந்து சீனா, தென் கொரியா அணிகள் சூப்பா் 4 சுற்றுக்கு வர, மலேசியா, சீன தைபே அணிகள் வெளியேறின.