லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
சிதம்பரத்தில் தொடரும் மின் வெட்டு: மக்கள், வியாபாரிகள் அவதி
சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிப்பின்றி திடீரென சுமாா் ஒரு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் சுமாா் 2 அல்லது 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுமச் செயலா் சி.டி.அப்பாவு கூறியதாவது: அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின் விநியோகம் நிறுத்தப்படுவதால், வீட்டில் உள்ள கணினி, தொலைகாட்சிப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் பழுதடைகின்றன. சிறு தொழில்முனைவோா் பாதிப்படைகின்றனா்.
சிதம்பரம் நகரில் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகும் நிலையில், மின்சாரமும் நிறுத்தப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனா். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் மாற்றிகள் பழுதடைந்துவிட்டது, இடையூறாக உள்ள மரங்களை வெட்டுகிறோம் என பல காரணங்களைத் தெரிவிக்கின்றனா்.
மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகத்தை நிறுத்தும்போது மின் வாரிய அதிகாரிகள் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம். எனவே, சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்றாா்.