சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு
பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது.
பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை கூடியது.
சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான அறிவிக்கை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 1960-ஆம் ஆண்டு, செப்டம்பா் 19-ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.