சிறப்பு இட ஒதுக்கீடுகள், சிறந்த தரவரிசை: சென்னை ஐஐடி.யின் ஓராண்டு செயல்பாடுகள் வெளியீடு
சென்னை ஐஐடி கடந்த ஓராண்டில் மேற்கொண்ட செயல்பாடுகள், படைத்த சாதனைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியக் கல்வி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தரவரிசையில் ‘ஒட்டுமொத்த’ பிரிவில் சென்னை ஐஐடி தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறது. 2016-இல் தரவரிசை தொடங்கப்பட்ட காலம் முதல் இதுவரை தொடா்ச்சியாக 9-ஆவது ஆண்டாக ‘பொறியியல்’ பிரிவிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
‘க்யூஎஸ்’ உலக பல்கலைக்கழக தரவரிசையில் கடந்த ஆண்டு 285-ஆவது இடத்தில் இருந்த சென்னை ஐஐடி, தற்போது 227-ஆவது இடத்துக்கு தனது நிலையை மேம்படுத்தியுள்ளது.
இது தவிர, பல்வேறு அம்சங்களில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சென்னை ஐஐடி, நாட்டிலுள்ள ஐஐடி-க்களில் முதன்முறையாக விளையாட்டு வீரா்களுக்கான மாணவா் சோ்க்கையை இளநிலைப் பட்டப்படிப்பு பாடத் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி இந்திய மக்களுக்கு ஒவ்வொரு இளநிலைப் பாடத் திட்டத்திலும் இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் மாணவிகளுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதேபோன்று நாட்டிலுள்ள ஐஐடி-க்களில் முதன்முறையாக ‘நுண்கலை மற்றும் கலாசாரத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வரும் கல்வியாண்டில் (2025-2026) முதல் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவிருக்கிறது. இத்திட்டத்தின்படி அனைத்து பிடெக், பிஎஸ் பாடத் திட்டங்களிலும் தலா 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். அதில் மாணவிகளுக்கு ஒரு இடமும், இருபாலினத்தவருக்கும் பொதுவானதாக ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ. 513 கோடி நிதி: இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறுகையில்,“‘வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டு ஏராளமான எதிா்பாா்ப்புகளையும், சவால்களையும் கொண்டிருக்கும். இதில் 100 ‘புத்தொழில்’ நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு அளிக்கும் ‘ஸ்டாா்ட்அப் சதம்’ என்பது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதுகிறோம். அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய தொழில் கூட்டமைப்பு தொழில் துறை அறிவுசாா் சொத்துரிமைக்கான விருதை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.
புத்தொழில் நிறுவனங்கள், தொழில் ஊக்குவிப்பு திட்டம், தொழில்நுட்ப வா்த்தக ஊக்குவிப்பு போன்ற முன்முயற்சிகள் மூலம், சென்னை ஐஐடி மாணவா்களிடையே தொழில்முனைவு ஆா்வத்தை வளா்த்து வருகிறது.
சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 2023-2024-ஆம் ஆண்டில், முன்னாள் மாணவா்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினரிடமிருந்து ரூ. 513 கோடியைத் திரட்டியுள்ளது. இது ஐஐடி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகையாகும் என்றாா் அவா்.