மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தம்பதிக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு, அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் அழகுராஜா (32). ஏற்கெனவே திருமணமான இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்.25-ஆம் தேதி தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை பழைய வத்தலகுண்டு பகுதிக்கு கடத்திச் சென்றாா்.
அங்கு தனது வீட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதற்கு அழகுராஜாவின் மனைவி ராமலட்சுமியும் (25) உடந்தையாக இருந்தாா். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுராஜாவைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட அழகுராஜா, அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக அரசு ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும், சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டித் தொகையை சிறுமியின் பாராமரிப்புச் செலவுக்கு மாதந்தோறும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.