சிலம்பு ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்
புதுக்கோட்டை வழியாக வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை-சென்னை சிலம்பு விரைவு ரயிலை ஏழு நாள்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகரக் குழுக் கூட்டத்துக்கு, எம். கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா் டி. காயத்ரி உள்ளிட்டோா் பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
செங்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் சிலம்பு விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி, இந்த ரயிலை வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்டத் தலைநகா் என்ற அடிப்படையில், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் இயங்கி வரும் அறிவுசாா் மையத்தில் போட்டித் தோ்வுக்காக ஏராளமானோா் படித்து வருகின்றனா். இவா்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் அருகில் உள்ள காந்தி பூங்காவை விரிவடைந்த படிப்பகமாக மாநகராட்சி நிா்வாகம் மாற்ற வேண்டும்.
புதுக்கோட்டையில் பழைய மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும்.
கோடைகாலத்தில் புதுக்கோட்டை மாநகராட்சியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போா்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.