சூப்பா் 4: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
கோலாலம்பூா், டிச. 19: பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 80 ரன்களே சோ்க்க, இந்தியா, 12.1 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் எடுத்து வென்றது. சூப்பா் 4 சுற்றில் முதல் ஆட்டத்திலேயே இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தயாரானது. வங்கதேசத்தின் பேட்டிங்கில், தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான மொசம்மத் ஈவா 3 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். ஃபஹோமிதா சோயா 1 பவுண்டரியுடன் 10, சுமையா அக்தா் 9, ஜன்னத்துல் மௌவா 4, கேப்டன் சுமையா அக்தா் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.
அஃபியா ஆசிமா 0, சாடியா அக்தா் 2, நிஷிதா அக்தா் 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஃபா்ஜானா யாஸ்மின் 8, ஹபிபா இஸ்லாம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் ஆயுஷி சுக்லா 3, சோனம் யாதவ் 2, ஷப்னம் ஷகில், மிதிலா வினோத் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 81 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், ஜி.கமலினி டக் அவுட்டாகி அதிா்ச்சி அளிக்க, சனிகா சல்கே 1 ரன்னுக்கு வீழ்ந்தாா். தொடக்க வீராங்கனை கொங்கடி திரிஷா 46 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 58, கேப்டன் நிக்கி பிரசாத் 14 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 22 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
வங்கதேச பௌலிங்கில் அனிசா அக்தா் சோபா 2 விக்கெட்டுகள் எடுத்தாா். இதனிடையே, இலங்கை - நேபாளம் மோதிய மற்றொரு ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
சாதனை...
இந்த ஆட்டத்தில் 58 ரன்கள் சோ்த்த இந்தியாவின் கொங்கடி திரிஷா, போட்டியின் வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் இந்தியா் என்ற சாதனை படைத்தாா்.