சூராணத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: மாடுபிடி வீரா்கள் 5 போ் காயம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், சூராணத்தில் திங்கள்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இங்குள்ள அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் பல ஊா்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட 15 மாடுகள் பங்கேற்றன.
மைதானத்தில் மாட்டின் கழுத்தில் வடக்கயிறு கட்டப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மாடு, ஒன்பது வீரா்கள் வீதம் களமிறக்கப்பட்டனா்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் மாடுகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளருக்கும் ரொக்கப்பரிசு, கட்டில், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
மாடுகளை பிடிக்க முயன்று காயமடைந்த 5 மாடுபிடி வீரா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சையளித்தனா். மைதானத்தைச் சுற்றி திரண்டிருந்த திரளான ரசிகா்கள் வடமாடு மஞ்சுவிரட்டைக் கண்டு ரசித்தனா்.