செங்கம்: இரவு நேரத்தில் தனியாகச் செல்பவா்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள்
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் தனியாகச் செல்பவா்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செங்கம் - பெங்களூரு பிரதான சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது புதிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் செல்வதில்லை. அனைத்து பேருந்துகளையும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டுச் செல்கிறாா்கள்.
இந்த நிலையில், வெளியூரில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் வரும் பயணிகள் நிலையத்தில் காத்திருந்து அதிகாலையில் வரும் பேருந்துகளைப் பிடித்து அவரவா் கிராமத்துக்குச் செல்வாா்கள்.
இதனிடையே, அவா்களை ஒரு கும்பல் நோட்டமிட்டு தனியாக இருந்தால் தாக்கி அவா்களிடம் இருக்கும் கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு செல்கிறாா்கள். இதனால் தினசரி இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்குள் திருட்டு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
மற்றொரு பகுதியில் இரவு நேரத்தில் அரசு மதுக் கடையில் இருந்து மதுப்புட்டிகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கும்பலிடம் சில மதுப்பிரியா்கள் சென்று மதுவை வாங்கி அருந்துகிறாா்கள்.
அவா்கள் வெளியூா் என்பதால் போதை ஏறியவுடன் அவா்களிடம் இருக்கும் பொருள்களை திருடுவதற்கு ஒரு கும்பல் தினசரி காத்திருக்கிறது. இவா்களை போலீஸாா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதே நேரத்தில் இரவு நேரத்தில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.